Sunday, April 12, 2026

​நிலவின் நிறம் கறுப்பு







​பிரபஞ்சத்தின் ஆதி வண்ணம் கறுப்பென

அந்தத் தனக்கென்று நிறமில்லா முழுமதியைக் கடந்த பின்

மனிதனே அறிந்து கண்டான்.

ஆண்டாண்டு காலமாய் நிலவு வெள்ளையென்று நம்பிய அவன்,

அமாவாசையைக் கரிநாளென்று முழுமையாய் ஒதுக்கிவைத்து

பௌர்ணமியைக் கொண்டாடினான்.

​தோலின் நிறம்கொண்டு தன் இனத்தைப் பிரித்து வைத்து,

கறுப்பழகி அவளை...

ஊசி முனையாய் சொற்களால் குத்தினான்.

பிஞ்சு வளர்பிறையில் உயிர் தழும்புகளை விட்டுச் சென்றான்.

நிறத்தின் பெயரால் நிழலில் தள்ளப்பட்டபோது,

அவளே அவளுக்கு அந்நியமானாள்.

​சிறு மிட்டாயும், சிற்றோடை விளையாட்டும் தந்த -

சின்னஞ்சிறு சந்தோஷங்களைக்கூட,

"தகுதியற்றவள்" என்று அவளே விட்டுக்கொடுத்தாள்.

யாரோ வரைந்த அழகின் இலக்கணத்தில்,

தன் முகம் இல்லையென்று மூலையில் முடங்கினாள்.

தனிமையின் இருள் அவளை விழுங்கியபோது,

மௌனமே அவளுக்குச் சிறையானது.

​இருளின் ரகசியம்

​அழுத கண்கள் துடைக்கப்பட்ட ஒரு கணத்தில்,

உண்மையை உரக்க உணர்ந்தாள். 

இரவு கருமையாய் இருப்பதால்தான் -

பிரபஞ்சத்தின் கோடான கோடி விண்மீன்கள்

வெளிச்சமாய் தெரிகின்றன!

​இருள் என்பது ஒளியின் இன்மை அல்ல,

அது ஒளியைத் தாங்கும் கருப்பை.

தன்னைத் தள்ளி வைத்தவர்கள் முன்னே,

தன்னம்பிக்கையை ஆடையாக உடுத்திக்கொண்டாள்.

​மீண்டெழுந்த மனிதம்

​கறுப்பு என்பது சுமையல்ல,

அது காலங்காலமாய் பூமி சுமக்கும் -

வளமான மண்ணின் நிறமென்று நிமிர்ந்தாள்.

அழகைத் தோலில் தேடியவர்கள் மத்தியில்,

அன்பையும் அறிவையும் தன் அடையாளமாக்கினாள்.

​இன்று அவள் எரிகற்களின் காயங்களைச் சுமக்கும் பெண்ணல்ல,

காயங்களைச் செதுக்கிச் சிலையாக மாறிய பேருண்மை !

அவளுள் ஊற்றெடுக்கும் இந்த மகா மனிதம்,

வெறுப்பு விதைத்தவர்களையும் மன்னிக்கும்...

​ஏனெனில், அவள் நிறத்தைப் போலவே -

அவள் இதயமும் இப்போது ஆழமானது, பேரழகானது.


News.; Recent lunar observations have revealed that the Moon's surface appears unexpectedly dark during close flybys due to the presence of ancient, carbon-rich materials and volcanic glass deposits

Sikaran 

12 Apri 26




Saturday, April 11, 2026

ஒரு பாதி மரத்தின் கதை


ஆயிரமாயிரம் அருமையான 

ஆண்டவன் படைப்புக்களில் 

அரும்பாக முளைத்த 

அற்புதமான சிற்றுயிர்களில 

நானும் ஒருவன் 


சிறு வயதின்  போராட்டங்கள் 

அளவில் குறையில்லாமல் 

எனக்கும் நிறைந்திருந்தது 

 

கடுங்குளிர். கட்டுக்கடங்கா காற்று

கரை புரண்ட வெள்ளம் என 

சீரழிந்த என் இளமைக்காலம் 

சொல்லொணா காயங்களாய் - என் 

ஆழ் மன வேர்களில் இன்னும் இருக்கிறது. 


அரவணைக்கும் இயற்கையும் 

விரிந்த வானமுமே

அடுத்தடுத்த கனவுகளுக்கு வழிகாட்ட 

எனக்கான கனவையும் 

நானும் கண்டிருந்தேன். 


வானம் தொடும் ஆசையில்

வாசனை மலர்கள் என்னுள் சிரிக்க,

வண்ணத்துப் பூச்சிகள் என் மடியில்

வட்டமிடும் கனவுகள் கண்டேன்!


ஓங்கி வளர வேண்டும் 

ஒய்யார களிப்பு வேண்டும் 

ஆடி அடங்க வேண்டும் 

அன்பாக இருத்தல் வேண்டும். 


அளவிலா காதலுடன்

அன்பான துணையுடன்

அனைவருக்கும் - நிழல்

அள்ளி அள்ளி கொடுக்க வேண்டும் 

 

கிளைகள் விரித்து நான் வளர - என்

தோள்களில் பறவைகள் 

குடியேற வேண்டும்!

அடைக்கலம் தேடி வரும் உயிர்களுக்கு

ஆயுள் காக்கும் அரணாய் மாற வேண்டும்!


​சிட்டுக்களும் (Wrens), செஞ்சாரைகளும் (Robins) - என்

சிறு கிளைகளில் ஊஞ்சலாட ​- பெரிய 

சிட்டுகளும் (Great tits). நீலச் சிட்டுகளும் (Blue tits),

என்னை பெயர் சொல்லி  அழைக்க வேண்டும் -நிதமும் 

என் காதில் ரகசியம் பேச வேண்டும்!


துள்ளித் திரியும் அணில்கள் - என் 

மார்பைத் தழுவ வேண்டும்!

​பலவண்ணப் பறவைகள் பாடும் - அந்த

பரவசக் கீதத்தில் நான்  நாளும் 

உறங்க வேண்டும்!


தனிமரமாய் நில்லாமல் தாராளமாய் விதை பரப்ப 

மண்ணில் விழும் என் ஒவ்வொரு துளியும்

மறுபடி ஒரு உயிராய் எழ வேண்டும்!

​வளமான சிறு மரங்கள் நித்தமும்

என்னைச் சுற்றி வளர வேண்டும் _அவை  

என் தோள் உரசித் தழுவ வேண்டும்!

​கிளைகள் கோர்த்து நாங்கள் ஆடும்

கேலிக் கூத்துகள் விண்ணைத் தொட வேண்டும்!


எண்ணிலா கிளைகள் கொண்டு 

தனக்கெனவோர் தோப்பமைத்து 

வானம் தொடும் ஆசையில்

வாஞ்சையோடு நான் வளர

காலம் இட்ட கோலமோ

கண்முன்னே மாறியது.


​திசை மாறிய பயணம்

​மின்னல் வெட்டிய வேகத்தில்

பாதி உடல் கருகிப் போனது

ஏன்னை அறியாமல் என் கனவுகள்

மௌனமாய் விடைபெற்றது.

பாதி மரம் போன பின்பு

மீதி உயிரோடு நிற்கின்றேன்!





பாதியற்றுப் போனது 

என் தேகம் மட்டுமல்ல

என் கனவுகளுந்தான்.....


சிகரன் 

Rydal  Mount 

Lake District 

30 March 2026