Friday, October 15, 2010

மூன்றெழுத்து மந்திரம்

முதன் நாள் முடிந்து 
மூன்று நாள் இன்று 
மூன்று பகல் 
மூன்று இரவு


மூவாயிரம் கோடி கனவுகள்

முன்னூறாயிரம் திட்டங்கள்
முதன் முதல் அனுபவங்கள் 
முதன் முதல் அறிமுகங்கள் 

மூன்றெழுத்து மந்திரத்தின் 
முகவரி மாற்றிக் கொண்டோம் 
முதல் கணத்திலியே 
முழுதும்  அறிந்தோம்

முதல் முத்தத்தை 
மூலதனம் இட்டோம் 
முதிர் கனிச் செம்மை 
முகத்தில் கண்டோம்

மூன்றெழுத்து  
மந்திரம் மட்டுமல்ல - உன்
முதற் பெயரும் என் 
மறு பெயரும் 

மேலும் தொடருமென 
சிகரன்










Friday, October 8, 2010

சோதிடக் கிழவி

சோதிடக் கிழவியொண்டு 
பாதிவழி நடு நிறுத்தி 
சேதியொன்று சொன்னது 
முன்பொருநாள் இதே நாளில் 

முன்றெழுத்து நட்பொன்று 
நாளுக்கு கூடிவரும் 
நாளும் உன் நினைவுடன் 
நன்றாக சேர்ந்திருக்கும் 

காணத உணர்வெல்லாம் 
கரைசேரக் காண்பாய்  நீ  
கற்று கற்றே உன் 
காலங்கள் போகும் என்றும் 

கடைசி வரைக்கும் 
காதலும் 
காத்திருப்புகளும் 
கனவாகவே இருக்கும் என்றும் 

சொல்லி முடித்திருந்தாள்
சொற்பன  கிழவி
சிவனையே நம்பவில்லை 
சிறுகதையை நம்புவேனா? 

சிவனும் கூட கிழவிக்கு சார்பு போல் 
அவளுக்கும்  கூட அதையே சொல்லி வைத்தான் 
நடு சாமம் தாண்டி நல்லதாய் ஒரு கனவில் 
நண்பனை கண்பித்தான்!

அர்த்த ராத்திரியில் நிகழ்ந்தது 
ஆனந்த சந்திப்பு 
அவர்கள் அறியாமலேயே 
அடி பணிந்து போயினர் 

அரங்கம் இல்லாமலேயே 
அந்தரங்கங்கள் அரங்கேற்றப்பட
ஆனந்த தாண்டவம் 
இருவரும் ஆடினர் 

வரையறை தெரிந்தும் 
வார்த்தை மீறினர் 
கடமை உணர்ந்தும் 
கட்டளை மீறினர் 

காதலின் சுகத்தையும் 
காத்திருப்புகளின் வலியையும் 
அணு அணுவாக 
அறிந்து கொண்டனர் 

கற்றுத்தெரிந்தவற்றை 
கனவாக்கி கொண்டனர் 
காலம் முடிந்ததும் 
நனவை உணர்ந்தனர் 

கனவு எது ? 
சோதிடக் கிழவியா 
சொல்லிவைத்த சேதியா?
கற்பனை காதலா? 
காத்திருப்புக்களா? 
காலத்தின் முடிவா?


இன்று மீண்டும் 
அந்த கிழவி 
என்வழி நிறுத்தி 
மறு கதை கூற 


என் கை பிடிக்கிறாள் 
மீண்டும் அதே கதை!
ஆனால் 
இது மட்டும் கனவு


சிகரன் 
09  oct 2010











Sunday, September 26, 2010

ஒற்றுமை - வேற்றுமை

பிறந்த இடங்கள் 
படித்த பள்ளி
பொறுக்கிய பாடங்கள் 
செதுக்கிய பட்டங்கள் 
பிடித்த ஆடை 
பிடிக்காத கலாச்சாரம் 
தெரிந்த விடயங்கள் 
தெரியாத உண்மைகள் 
கண்ட கனவுகள் 
காணத நனவுகள் 
பழகிய கலைகள் 
பழக்கமில்லா பண்புகள் 
அனைத்தும் ஒன்றாக  இருந்தும்
நீயும் நானும் வேறாக
சிகரன் 



Saturday, September 11, 2010

கிளை தவறிய இலைகள்

செல் கொண்டு
செதுக்கிய
அற்புத சிலைகளில் 
நீயும் நானும் 
தத்ரூபமாக அமைந்திருந்தும் 
நான் வளர்த்த 
காதல் பெருமரத்தின் 
ஆனந்த கிளைகளில்  
தவறிய இலையாக  
இன்று 
நீ!


சிகரன் !
11 09 2010


Sunday, September 5, 2010

ஞாபகம்

சிறு வயதில் நியோர் சிகரமாய் நின்றது 
மறு படியும் என் மனதில் சரளமாய் வருகிறது
தட்டா தெருச் சந்தியிலிருந்து 
எட்டாத சைக்கிளில் நாமும் - கால் 
முட்டுகின்ற சைக்கிளில் நீயும் - நேரம் 
தட்டாமல் சந்தித்தோமே? 
ஞாபகம் வருகிறதா?
மொழி கொண்டு பேசவில்லை நாம் கண் 
விழி கொண்டு பேசினோம் 
கடைசி நாள் கல்விக்கூடத்தில் 
சற்றும் அறியாத பருவமதில் 
முற்றும் திறந்த முதியவரை 
முறையாக நான் மணப்பேன் என 
விரைவாகக் கூறினாயே !
ஞாபகம் வருகிறதா?
என்ன சொன்னாய், 
நாங்கள் எல்லாம் உனக்கு 
சின்ன பயல்கள் என்றா? 
எங்களை பார்த்தாயா இன்று?
காலம் தான் பதில் சொல்லும் 
பருவத்து வினாக்களுக்கு?
கடல் கடந்தும் உனக்கு 
மடல் எழுதுகின்றோம் 
எனக்கு என்னவோ எண்ணத் தோன்றுது
கடவுள் என்றோ நம் விதியை எழுதி விட்டான் என்று !
சிகரன் 


04 November 2008

எனக்கு பிடித்தது !

தோலின் நிறம் 
தாவும் பேச்சு 
தலை கோதும் விரல்கள் 
தடுமாறும் சொற்கள் 

சிரிக்கும் புருவம் 
சிறுகத் துளிர்த்த பருக்கள் 
சீறிடும் கோபம் 
சிந்திக்கும் வேகம் 

மனம் மயக்கும் பார்வை 
குணம் மிகுந்த சேர்க்கை 
கேட்கும் பொறுமை 
காக்கும் ஆர்வம்

இவையெல்லாம் 
நீ சொன்ன பின்பு தான் 
என்னையே 
எனக்கு பிடித்தது !

சிகரன் 


Saturday, September 4, 2010

நடைப்பிணம்

நாளை முதல் நான் ஒரு
நடைப்பிணம்

நாதியற்றவர்கள் கூட ஒரு கணம் நின்று
நலம் விசாரிக்க மாட்டார்கள்

நட்புகள் மட்டுமல்ல உறவுகள் கூட
நாயுண்ணி ஆவர்கள்

நம்பிக்கைக்கு கிடைக்கும்
நித்திய ஏமாற்றம்

நமட்டு சிரிப்புகள்
நாள் தோறும் கேட்கும்

நாளம் நரம்பெல்லாம்
நிர்கதியாகும்

நந்தவனங்கள்
நரகலோகமாகும்

நரபலித் தெய்வம்
நர்த்தனமாடும்

நேற்று கிடைத்த
நட்சான்றிதழில்

நனைந்து நமையும் என்
நல் நினைவெல்லாம்

நாயனம் இன்றியே
நாதம் இனி அடங்கும்

நாட்பட்ட உளகுமைச்சல்
நாற்றமெடுக்கும்

நிலையின்றி என் கதை
நிர்வாணமாகும்

நீவி விட்ட என் உறவு
நிலை மாறிப் போகும்

நினைவுக்குள்
நீந்தி
நடைபிணம் மாளும்.


நன்றியுடன் சிகரன்
நாட்டுக்காக!

04 Sep 2010

Saturday, August 28, 2010

மனிதம் + விதி = வாழ்க்கை ......நிறுவல் I

நிறுவல் 1
அறிமுகம் 
அவன்: (மனிதத்தின் பாகம்)
மூன்றடுக்கு மாடிவீடு 
முன்னுக்கு மூண்டு கார் 
நுனிநாக்கில் இங்கிலீசு 
தனியாக தங்குமிடம் 
இரவு விடுதி களியாட்டம் 
இல்லையெண்டால் Blind Dating
மூத்த சகோதரிக்கு   
முந்தநாள் விவாகரத்து,
இளைய சகோதரிக்கு
எந்தநாளும் விவாகரத்து

அவள் (மனிதத்தின் பாகம்) 
மூண்டுவேளை ஒருசோறு 
முதலுதவி எண்டாலும்
மூண்டு மைல் நடக்கவேணும் 
பாதி சம்பளம் மருந்தோட போயிடும் 
மீதி மிச்சமெல்லாம் எண்டைக்கும் கண்டதில்லை 
படிப்பில மட்டுமில்ல வேலையிலையும் 
கெட்டிக்காரி . தானும் தன்ர  வீடும் எண்டு 
நல்லாத்தான் இருந்தவளாம்  

விதி 
வடிவம் ஏதும் இன்றி எதிலும் வந்து குந்தும் 
மாயப் பிசாசு , இந்த சமன் பாடில் 
இது அந்த குரூப் ஸ்டடி. 

 செயன் முறை 
அந்த கோர்ஸ்  படிச்சா தான் 
நல்ல வேலை கிடைக்குமெண்டு அவளும் 
எதாவது படிச்சாக வேணுமெண்டு அவனும் 
ஒன்றாக ஒரே வகுப்பில் இளமை ததும்பும் 
கல்லூரிச் குடுவையில்  இடப்படுகின்றனர்.
ஆரம்ப தாக்கம் குறைவாக இருந்ததால் 
விதி தந்த ஊக்கி சோதனை செய்யப்பட்டது 

அவள் அவன் இருவரும் ஒரு குரூப்
அவள் அவன் இருவருக்கும் ஒரு அசைன்மென்ட்
அவனுக்கும் சேர்த்து அவளே படித்தாள்
அறிவின் மேற்பரப்பில் அன்பும் பகிர்ந்தது
அவர்களை தெரிந்தும் அவர்களே மறந்தனர்
அகவெப்ப தாக்கமாக காதல் மலர்ந்தது
உள்ளம் குளிர்ந்து ஆழம் உணர்ந்தது !
பதிவேதும் இன்றியே   உறவும் வளந்தது 

விளக்கம்
அவள் தலை முறையில் யாருமே
படி தாண்டியது இல்லை
அளவுக்கு மீறி எவரும்
குழி தோண்டியது இல்லை
வாழ்கை தேர் என்றுமே
குடம் சாய்ந்ததில்லை
பண்பாடு என்றுமே
மடம் போனதில்லை.

படிதாண்டல் குழி தோண்டல்
குடம் சாய்தல் மடம்போதல்
ஒன்றுமே புதிதல்ல அவனுக்கு என்றும்

உறவு வளர்ந்ததும் தாக்கம் முடிந்தது
தாக்கம் முடிந்ததும் யதார்த்தம் புரிந்தது

வாழ்க்கை வட்டங்கள் மேட் பொருந்தவே இல்லை

வாழ்ந்தாக வேண்டும் வருடம் முழுவதும்
வாழ்வின் வரைவிலக்கணத்தை
தனித்தனியாக எழுதிக்கொண்டனர்
இரு வேறு வாழ்க்கை வட்டங்கள்
இருவருக்கும் பொருந்திக் கொண்டன.
இதற்கும் விதி என பெயரிடப்பட்டது

முடிவு 
மனிதம்கள் விதியினால் கலக்கப் பட்டு
வாழ்க்கை அமைக்கப்படுகிறது .

நிறுவல் II  தொடரும் ...

சிகரன் (நட்பை படித்தபோது )
28 August 2010





Tuesday, August 24, 2010

மாற்றங்கள்

நினைவு தெரிந்த நாளில் இருந்து 
எனக்கு கிடைக்கப்பெற்ற 
ஆயிரமாயிரம் ஹாய்  களுக்குள் 
அன்று நீ சொன்ன அந்த அழகான ஹாய் 
இன்றும் இனிமையாக 
என்றும் பசுமையாக!

பிறந்து இன்று வரை பயணித்த 
ஆயிரமாயிரம் பேருந்துகளில் 
நீயும் நானும் பயணித்த 
அந்த தோலுரிந்த பேருந்தும் 
குடல் பிரிந்த இருக்கைகளும் 
இன்றும் இதமாக 
மனதுக்கு சுகமாக! 

சாதனை செய்வேன் என சாக்கு போக்கு சொல்லியே 
வீணடித்த வினாடிகள் கோடியாய் இருக்க 
கொஞ்ச நேரம் போனதற்கே 
கோபம் கொண்ட உன் மனதை 
தேற்ற நான் செய்த 
சாதனைகள் இன்றும் 
திடமான பதிவாக!

அந்த இதம் சுகம் 
இனிமை பசுமை
பதிவுகள் சாதனைகள் 
எல்லாம் 
சற்று முன் வரை எம்மோடு. 
ஆனால் நீ கூறிய பின்புதான் உணர்ந்துகொண்டேன் 
மாற்றங்கள் எப்போதும் மாறாதவை என்று !

இனி  ...!
.....................
........................
.........................
.........
....................!



சிகரனின் கற்பனையில் ..!


Monday, August 23, 2010

எத்தனை நடக்குமோ?

செத்து பிறந்த உம் மானமினி இங்கு
கத்தும் குரல் கேட்கும் - உன் சுகம்
வித்து பிழைத்த காட்டேரி இனி உன்
முத்தத்தை தினம் ஆளும்

பத்து வயதில் பார்த்த வதைகள் - நின்
புத்தியிலே வற்றிப் போகும்
சொத்து சுகமுடன் சொற்பனமாய் வாழ
சித்தம் துடிக்கும் சுகத்தை தேடும்

வத்தை வரம்பெல்லாம் சிங்களம் பேசும்
நித்தம் ஓர் துளியாக செந்தமிழ் சாகும்
கத்தை கத்தையா காணிகள் போகும்
பித்து பிடித்தங்கே நம் தாகம் அலையும்

குத்தகை சொத்தெல்லாம் பத்திரம் மாறும்
சித்திரத்தோடு நம் வரலாறும் மாறும்
பத்திரமாக செதுக்கிய சிலைகளில்
புத்த கொடியிங்கு வீரமாய் பறக்கும்

முத்தமிழ் குமரனின் காலாட்படையில் உன்
இரத்தம் குடித்தவன் சேனதிபதியாவன்
இத்தனை நடந்தது  எத்தனை நடக்குமோ?
மோட்சம் இன்றியே நம்முயிர் அழியுமோ?

சிகரன் மனதில் பட்டவை ..!
23 August 2010 


Tuesday, June 8, 2010

புகைப்படம்

நான் பார்த்தது என்னவோ
நீ புன்னகைத்துக்கொண்டிருக்கும்
அந்த அரைவாசி புகைப்படம் தான்
இன்னும் நான் உணரவில்லை
நானும் புன்னகைத்துக் கொண்டிருக்கிறேன்
என்று
சிகரன்!

Saturday, May 29, 2010

திவசம்

ஊற்றெடுத்தோம்  பத்து மாதம்
உடன்  பயின்றோம் சில  மாதம்
சேர்ந்திருந்தோம் சில மாதம்
பிரிந்திருந்தோம் பல மாதம்

வம்பளத்தோம் சும்மா தம்
மார் தட்டினோம் பிரமாதம்
அம்மா தம் முதுசமதை
நிராதாரம் செய்து வைத்தோம்


கண்டதற்கும் பரிகாசம்
கொண்டதற்கு வெளி வேஷம்
உள்ளுக்குள் சில்மிஷங்கள்
ஊருக்குள் வெடி விஷங்கள்
******************************************


இதிகாசம் படிக்காமல்
உபதேசம் செய்வித்தோம்
பாசறை அவனதுவென
பரதேசியாய் திரிந்தோம்


தோளுக்கு தோள் கொடுக்க
கால் சக்தி இல்லையென்று
வால் பிடித்தவனை - பார்
ஆள் என்று சொல்லிவைத்தோம்


வாள் கொண்ட செங்குருதி
பாழ் பட்டு போகையிலே - புத்தகத்
தாள் தான் நம் கதியென்று
மேல் படிப்பு படித்திருந்தோம்
*****************************************





சன்னச் சத்தம் கேட்டாலே
மனம் வாடிப்போகுமெண்டு
கனடாக்கு போய் நிண்டு
இன்டெர் நெட் பார்த்திருந்தோம்


கோலங்களோட 
சிலம் டாக் மில்லியனைர்
சித்தி முடிஞ்சோன 
சக்தி சுப்பர் ஸ்டார்  


இன்னும் காணாது - சில்லி 
சிக்கன் லெக் வேணுமெண்டும 
சைனீஸ் உணவுண்டும 
திண்டு திளைத்திருந்தோம்
*****************************************


வைகாசி விடுமுறையாம்
காசிக்கும் போகவேணும்
நேசம்மா செத்துப்போனா
திவசமாம் போகவேணும்


பாசும் இல்லையாம்
பஸ்சும் ஓடுதாம்
பசங்களுக்கும் காட்டவேணும்
கசூரினா பீச் ஒருக்கா !


ஏ சி யோட பஸ் ஆம்
டி வீ யும் இருக்காம்
குத்தாமல் குலுக்காமல்
குவிக்க்காக போகுதாம் 
*****************************************


போனமுறை வந்த போது
வான் வந்து பிடிக்குமெண்டு
சாமான் வாங்கக் கூட
அம்மா விடேல்ல .


இந்த முறை போய்
சந்தெல்லாம் திரிய வேணும்
சொந்தம் சொத்தெல்லாம்
வந்து தான் பார்க்க வேணும்

ஹமீடியா போகவேணும்
வீடுக்க போடுறதுக்கு
ஜக்கட் கொஞ்சம் வாங்கவேணும்
முடிஞ்சா ஒருக்கா கதிர் காமம் போகவேணும்
*******************************************************


செத்துப்போன நேசம்மா
சொத்துப் புரளியெல்லாம்
பார்த்து முடிக்கோணும்
பத்து நாளுக்கை..!


அத்தி மரத்து அம்மனுக்கு
குத்தரிசி பொங்கவேணும்
சித்தப்பா வீட்டுக்கு
சுத்து மதில் கட்டவேணும்


காக்கை தீவு நண்டுக் கூழ் 
மூக்கு முட்ட குடிக்க வேணும் 
செக்கு நல்லெண்ணெய் தேய்த்து 
வக்கில குளிக்க வேணும் 
*******************************************************

இத்தனை வேண்டுதலும்
சத்தமின்றி செய்வதற்க்கு
இத்தேசம் என்ன? நீ வருந்திப
பெற்ற தாய்நாடா?


கட்டபொம்மன் வசனம் பேச 
நாட்டிலே யாரும் இல்லை!
எட்டப்பன் ஆளும் நாட்டில்  
சட்டங்கள் எதுவும் இல்லை!


வா, வந்து பார்
சாக் காடாய் கிடக்கும்
பூச் சோலைகளில்
சாக்கடைகளின் உதிரத் தாண்டவத்தை
******************************************************


முத்தமிழ் கேட்ட மண்ணில்
குற்றுயிராய் கிடக்கும் மொழியை பார்
அத்தி மரத்து அம்மன் இப்போ
புத்த மதம் கூறும் பார்

சித்திரை திருவிழாக்கள்
சிங்களத்தில் நடக்குது பார்
முத்துமாரி தீர்த்தக்கேணி
நீச்சல் குளம் ஆனது பார்


காலிழந்த மயிலை பார்
கழுத்துடைந்த குயிலைப் பார்
வட்டிழந்த பனையை பார்
கட்டில்லாத குளத்தை பார்
*******************************************************

வா! வந்து சேர் !
செடி முளைத்த சமாதிக்கு 
சுத்துமதில் கட்டு 
நேசம்மா தூங்கட்டும் நிம்மதியாக

பத்திரிகையடித்து
பத்து கறியுடன் சோறு போடு
நித்தம் உறங்கட்டும் நேசம்மா
சத்தம்  ஏதும் இல்லாமல்

இது நேசம்மா திவசமில்லை 
எமது தேசத்தின் திவசம்!  
நம் மண் வாசத்தின் திவசம் !
எம்மை பிரிந்த நேசத்தின் திவசம்!


வைகாசி 2010
சிகரன் 

Thursday, May 27, 2010

கந்தர்வ காதல்

மன்மதக் காலை 
சொன்னது சேதி 
கந்தர்வ காதல் 
செய்தது மீதி


தந்தி தொடுத்தது 
ஏகாந்த நினைவு 
சிந்தித்  தெறித்தது
தேகாந்தமெங்கும் 


கோபதாபங்கள் 
இதம் கொண்டது 
விரக தாபங்கள் 
மதம் கொண்டது

மாற்றம் அறிந்தனம் 
சூளுரை கலைந்தனம் 
முற்றும் அறிந்தனம் 
முழுமையும் கண்டனம் 


மாற்றம்  புரிந்தனம் 
சூளுரை கொண்டனம் 
முற்றும் தெரிந்தனம் 
முழுமையை வெறுத்தனம்


கோபதாபங்கள் 
மதம் கொண்டது 
விரக தாபங்கள் 
இதம் கொண்டது  


இனி 


சிந்தி தெறிக்கும் 
ஏகாந்த நினைவை 
தேகாந்தமெங்கும்
தந்தி தொடுக்கும் 


மீண்டும் சேரும் மன்மதக் காலை 
மாண்டுபோகும் சீறிடும் ஊடல் 
செய்திகள் சொல்லும் 
கந்தர்வ காதலை !


சிகரன் 
27 May 2010 


( காதல் இங்கே மண்ணிற்கும் மனிதனுக்கும் )





Tuesday, May 25, 2010

பிறந்த நாள் வாழ்த்துகள்!

உன் அளவு கடந்த அன்பை கோபம்
எனும் ஆற்றாமைக்குள் மூட்டை   கட்ட முயலும் 
உன் முரட்டு விதண்டா வாதங்களால் 
கூனி குறுகி சிதைந்து சீரழிந்த 
என் நிறைவேறா அபிலாஷைகளுக்குள்
நின் நினைவுகளுடன் வாடி வதங்கி
தனித்தே இயங்க கற்றுகொண்ட 
என் இதயம் -
மீண்டும் ஒரு தடவை 
உன் வர விருக்கும் பிறந்த நாளையும்  கூட
மறந்து விடும் என்பது தான்
எந்நாளும் உண்மை ! 
மனது மறக்காத கற்பனை  கோட்டைகளுக்கு
அத்திவாரம்  போட்ட
உன் கடந்து போன
பிறந்த நாட்களுடன்....
மீண்டும் ஒரு பிறந்தநாளுக்காய்
பெரிதாய் ஒரு கூட்டை கட்டிக் கொண்டிருக்கும்
கற்பனைக் காவியத்துக்கு
முன்கூட்டிய
பிறந்த நாள் வாழ்த்துகள்;
என் மனது மட்டும் கேட்க்கும்  படியாக...!
சிகரன்
22 May 2010



Sunday, May 16, 2010

கனவு

கண்ட முதல் நொடியில்
கை குலுக்கி
காரிருளில் நடை பழகி
கணப்பொழுதில் அரங்கேற்றி
கண்டவரை மகிழ்வித்து
காணும்வரை காத்திருந்து
கடைசிவரைக்கும் பிரியாது
கதைகள் பல நினைத்து - நீ
கட்டிய கனவுக்கோட்டை
கடலலையாய் - உன் கண்களில்
கண்ணீராக!

21 April 2010



Wednesday, April 28, 2010

காதல்


கவிஞன் சொன்னான்
காதல் என்று - ஏனெனில்
ரசிக்க்த்தெரிந்தவன்!

கடவுள் சொன்னான்
அன்பு என்று- ஏனெனில்
ரட்சிக்கத்தெரிந்ததவன்!

நண்பன் சொன்னான்
ஆசை என்று- ஏனெனில்
மதிக்கத்தெரிந்தவன்!

மற்றவன் சொன்னான்
மோசம் என்று -ஏனெனில்
மதிப்பறியாதவன்!

தோற்றவன் சொன்னான்
கசக்கும் என்று -ஏனெனில்
அனுபவிக்க தெரியாதவன்!

வென்றவன் சொன்னான்
இனிக்கும் என்று -ஏனெனில்
அனுபவித்தவன் !

கண்டவன் சொன்னான்
காமம் என்று- ஏனெனில்
காத்திருந்தவன்

நீங்கள் சொல்கிறீர்கள்
'இல்லை இல்லை - அது
அவஸ்தை என்று' -ஏனெனில்
காதலிக்க தெரியாதவர்கள்!!
 
சிகரன் 

30 April 2008 

விடை கொடுக்கும்பொழுது


விடை கொடுக்கும்பொழுது
உன் முகத்தில் நிழல்கள் விழுவதில்லை
இன்னும் நம்பிக்கைக்கு
இடமுண்டாவென திரும்பிப் பார்க்கவே செய்கிறேன்!

விடை கொடுக்கும்பொழுது - உன் கண்கள்
எதையும் வெளிப்படுத்துவதில்லை
தூசிக்காவது இமைகள் மூடாதாவென
யாசிக்கவே செய்கிறேன் !

விடை கொடுக்கும்பொழுது - உன் கைகள்
உறுதியிழப்பதே இல்லை
உளைவெடுக்கவாவது நீளாதாவென்று
எதிர்பார்க்கவே செய்கிறேன்

இந்தமுறையும்
சரியாக சொல்லிக்கொள்ளவில்லையே என
வழியெல்லாம் நினைத்துக்கொண்டே
போகிறேன் .....
சிகரன் 
2005 
posted
26 June 2008 

Sunday, April 25, 2010

From a friend

My Dearest Friend,
If you ask me "What does friendship mean?"
I can never answer.
But deep in my heart I know...
When we hold hands
and walk to gather,
when we start our 
aimless and endless talks 
and never stop..


When we feel sad for each other 
the moment something goes wrong,
when we cant say without seeing each other
 a single day,
when we cant sleep at nights,
without sharing our secrets .. 
Sri, 
those are the times I feel there is something very special between us 
and I guess
that special thing is what called  "FRIENDSHIP"


You mean it!


From loving.. 
.......
26th March 2005 

மனதுக்கு மாறாக மாற்று வினாவுக்காக !

மனதுக்கு மாறாக
மாற்று வினாவுக்காக !

மன்னிக்கவும்
வினா மட்டும் தான் மாறாக 
மனது மட்டும் அப்படியே 
மாறாது 
உனக்காக 
உன் 
அன்புக்காக. 
சிகரன்
2000 த்தில் ஒரு நாள் . 

Saturday, April 24, 2010

உடைத்தவனும் உடைந்தவளும்

உருவேற்றியுள்ள க(வி)தை - இது ஒரு
உடைந்தவளின் உண்மைக்கதை!

உடைந்தவளும் உடைத்தவனும்
உரிமையாகவே தம்முள்
உள்ளம் தொலைத்தனர்.

உடைத்தவனும் மடையனானான்
உடைந்தவளும் மடைச்சியானாள்

உலகமே இதுதானென்று
ஊரறிய வலம் வந்தனர்!
உளமார காதலித்தனர்!

உடைந்தவள் வீட்டில் தடையில்லை
உரமாக இருந்தது அவளுணர்வு அங்கு

உற்றார் உடனிருந்தும்
உண்மையெதுவும் தெரிந்திருக்கவில்லை
உடைத்தவன் வீட்டில்

உளமே என்றனர்
உயிரே என்றனர்

உடைந்தவளும் உடைத்தவனும்
உயிரை பருகிக்கொண்டனர்?
உறவை வளர்த்துக்கொண்டனர்?

உலகம் உருண்டது
உளைச்சல் தொடங்கியது!

உன் மகன் ஓடி விட்டான் என்று
ஊர் பழி சொல்லுமென்று
உந்த காதலெல்லாம் செல்லாதென்று

உறுதியாக கூறினர்
உபதேசம் செய்தனர்

உடைத்தவன் வீட்டில் (2) -என்
உயிரற்ற உடல் தாண்டி
உன்னுயிரை ஏற்றுக்கொள் என்றனர்.

உடைத்தவன் மாறினான்
உறவை மாற்றினான்

உண்மையில் அவள் என் நண்பி என்றான்
உரிமைக்காதல் எப்போவோ
உடைந்து விட்டது என்றான்

உவள் என் வாழ்க்கைக்கு
உரியவளில்லை என்றான்

உவமானம் நிறையச் சொன்னான்
உத்தரவுகள் நிறையப் போட்டான்

உனக்கும் எனக்கும் இனி
உறவில்லையென்று
உறுதியாகச் சொன்னான்

உடைந்து போனாள் அவள்!
உதிரம் உறைந்தது அவளுக்கு!

உள்ளம் கொண்ட காதல் பரிசுகள்
ஊமையாகிவிட்ட காதல் சுவடுகள்
உதடுகள் கண்ட காதல் முத்தங்கள்

உலுப்பியெடுத்தன
உயிரைக் கரைத்தன

உலகமே இருண்டது
உயிர் விடத்துணிந்தது உடைந்தவள் உள்ளம்
உருக்குலைந்தது

உருக்கொண்டெழுந்தனர்
உடைந்தவள் வீட்டில்

உரக்க கத்தினர் - உடைத்தவன்
உயிரெடுப்பேனென
உறுமினர் உலகிற்கு!

உனக்காக எல்லாம் செய்வேன்
உனக்காக உயிரை விடுவேன் என்றவன் -இப்போ

ஊர்காவற் படையிடம் முறையிட்டான்
உடைத்தவன் குடும்ப மானம் காக்க
உடைந்தவள் குடும்ப மானம்

உயரப்பறந்தது ஊரில்
உடைந்தவள் அவள் பேரில்!

உள்ளாடை மாற்றக் கூட அவளுக்கின்று
உதவிகள் தேவை- இந்த
உலகில் அவள் பெயர் பைத்தியம்.

நன்றியுடன்

சிகரன்
30 March 2008

குறிப்பு : கவிதை யென்பதால் கடைசி வரி இன்று வரை பொய்

காதலில் தோல்வியென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது!

உன் இதயத்தில் என்செங்குருதி !


புன்னகைக்க முனைந்தேன்
புரியவில்லை என்றாய்

மயோகார்டியமும் தாண்டினேன்
மயங்க மாட்டேன் என்றாய்

அறைகள் நான்கு தான்
இடத்தையும் வலத்தையும் பிரித்தே வைத்தாய்

விளையாட முனைந்தேன்
பப்பிலரி முனைகளால் அடித்தே கலைத்தாய்

குருதியாய் வந்தேன்
ஆட்டேரி தான் வழி என்றாய்

சுருக்கினாய் விரித்தாய்
என்னையே பிரித்தாய்


நீ அழியாதிருக்கத்தான்
உன்னுள் நுழைகிறேன்
என்னை கலைப்பதில்
உனக்கென்ன ஆர்வம்

பரபரப்பாய் குடி புகுந்தேன்
பாதியிலே திரும்பி வந்தேன்

பன்னீராறு தடவைகள்
பரிதவித்து போகிறேன்
பத்திரமாய் உன்னை
பாதுகாப்பதற்காக!

காத்திரு ! மீண்டும் நான் வருவேன் !

உன் லப் டப் சந்ந்தங்களை
நித்தம் சிந்திக்கும்
செங்குருதி!
19 October 2008
சிகரன்