உடன் பயின்றோம் சில மாதம்
சேர்ந்திருந்தோம் சில மாதம்
பிரிந்திருந்தோம் பல மாதம்
வம்பளத்தோம் சும்மா தம்
மார் தட்டினோம் பிரமாதம்
அம்மா தம் முதுசமதை
நிராதாரம் செய்து வைத்தோம்
கண்டதற்கும் பரிகாசம்
கொண்டதற்கு வெளி வேஷம்
உள்ளுக்குள் சில்மிஷங்கள்
ஊருக்குள் வெடி விஷங்கள்
******************************************
இதிகாசம் படிக்காமல்
உபதேசம் செய்வித்தோம்
பாசறை அவனதுவென
பரதேசியாய் திரிந்தோம்
தோளுக்கு தோள் கொடுக்க
கால் சக்தி இல்லையென்று
வால் பிடித்தவனை - பார்
ஆள் என்று சொல்லிவைத்தோம்
வாள் கொண்ட செங்குருதி
பாழ் பட்டு போகையிலே - புத்தகத்
தாள் தான் நம் கதியென்று
மேல் படிப்பு படித்திருந்தோம்
*****************************************
சன்னச் சத்தம் கேட்டாலே
மனம் வாடிப்போகுமெண்டு
கனடாக்கு போய் நிண்டு
இன்டெர் நெட் பார்த்திருந்தோம்
கோலங்களோட
சிலம் டாக் மில்லியனைர்
சித்தி முடிஞ்சோன
சக்தி சுப்பர் ஸ்டார்
இன்னும் காணாது - சில்லி
சிக்கன் லெக் வேணுமெண்டும
சைனீஸ் உணவுண்டும
திண்டு திளைத்திருந்தோம்
*****************************************
வைகாசி விடுமுறையாம்
காசிக்கும் போகவேணும்
நேசம்மா செத்துப்போனா
திவசமாம் போகவேணும்
பாசும் இல்லையாம்
பஸ்சும் ஓடுதாம்
பசங்களுக்கும் காட்டவேணும்
கசூரினா பீச் ஒருக்கா !
ஏ சி யோட பஸ் ஆம்
டி வீ யும் இருக்காம்
குத்தாமல் குலுக்காமல்
குவிக்க்காக போகுதாம்
*****************************************
போனமுறை வந்த போது
வான் வந்து பிடிக்குமெண்டு
சாமான் வாங்கக் கூட
அம்மா விடேல்ல .
இந்த முறை போய்
சந்தெல்லாம் திரிய வேணும்
சொந்தம் சொத்தெல்லாம்
வந்து தான் பார்க்க வேணும்
ஹமீடியா போகவேணும்
வீடுக்க போடுறதுக்கு
ஜக்கட் கொஞ்சம் வாங்கவேணும்
முடிஞ்சா ஒருக்கா கதிர் காமம் போகவேணும்
*******************************************************
செத்துப்போன நேசம்மா
சொத்துப் புரளியெல்லாம்
பார்த்து முடிக்கோணும்
பத்து நாளுக்கை..!
அத்தி மரத்து அம்மனுக்கு
குத்தரிசி பொங்கவேணும்
சித்தப்பா வீட்டுக்கு
சுத்து மதில் கட்டவேணும்
காக்கை தீவு நண்டுக் கூழ்
மூக்கு முட்ட குடிக்க வேணும்
செக்கு நல்லெண்ணெய் தேய்த்து
வக்கில குளிக்க வேணும்
*******************************************************
இத்தனை வேண்டுதலும்
சத்தமின்றி செய்வதற்க்கு
இத்தேசம் என்ன? நீ வருந்திப
பெற்ற தாய்நாடா?
கட்டபொம்மன் வசனம் பேச
நாட்டிலே யாரும் இல்லை!
எட்டப்பன் ஆளும் நாட்டில்
சட்டங்கள் எதுவும் இல்லை!
வா, வந்து பார்
சாக் காடாய் கிடக்கும்
பூச் சோலைகளில்
சாக்கடைகளின் உதிரத் தாண்டவத்தை
******************************************************
முத்தமிழ் கேட்ட மண்ணில்
குற்றுயிராய் கிடக்கும் மொழியை பார்
அத்தி மரத்து அம்மன் இப்போ
புத்த மதம் கூறும் பார்
சித்திரை திருவிழாக்கள்
சிங்களத்தில் நடக்குது பார்
முத்துமாரி தீர்த்தக்கேணி
நீச்சல் குளம் ஆனது பார்
காலிழந்த மயிலை பார்
கழுத்துடைந்த குயிலைப் பார்
வட்டிழந்த பனையை பார்
கட்டில்லாத குளத்தை பார்
*******************************************************
வா! வந்து சேர் !
செடி முளைத்த சமாதிக்கு
சுத்துமதில் கட்டு
நேசம்மா தூங்கட்டும் நிம்மதியாக
பத்திரிகையடித்து
பத்து கறியுடன் சோறு போடு
நித்தம் உறங்கட்டும் நேசம்மா
சத்தம் ஏதும் இல்லாமல்
இது நேசம்மா திவசமில்லை
எமது தேசத்தின் திவசம்!
நம் மண் வாசத்தின் திவசம் !எம்மை பிரிந்த நேசத்தின் திவசம்!
வைகாசி 2010
சிகரன்
No comments:
Post a Comment