Friday, May 15, 2026

மிதிவண்டி

 ​

​இதமான மாலைப் பொழுது,

புழுதி படிந்த பாதையின் நடுவே

வரிசையாய் நின்ற என்தோழிகள், 

உன்னை தேடிக்களைத்திருந்த 

என் கண்கள் தூரத்தெரிந்த 

உன்னை கண்டதும் 

அகல விரித்துக் கொண்டன.  


நீல நிற சேட்டு 

வெள்ளை நிற வேட்டி அணிந்த 

உன் கண்கள் 

அந்த மங்கலான மாலைப்பொழுதிலும் 

பட்டுத்தாவணிகளை 

தேடிக்கொண்டிருந்தன. 


​மீசை முளைக்காத வயது,

மாசறியா வெள்ளை உள்ளம்,

நெஞ்சுக்குள் ஏதோ ஒரு பயம்...

இருந்தும், உன் விழிகளில் வழிந்தது

வார்த்தைகளில்லாப் பெருங்கருணை.


​காரிருள் சூழ்ந்து வர,

பதறியது உன் கள்ளமில்லா மனம்.

"நேரமாகிவிட்டது,

பத்திரமாய் வீட்டிற்குப் போக வேணும்..."

நீ சொன்ன அந்த ஒற்றை வார்த்தை!

​அதிகாரமும் இல்லை,

அளவுக்கு மீறிய உரிமையும் இல்லை,

அன்பு கலந்த அந்த அக்கறை...


அதிர்ஷ்டம் தேடி நாம் சென்ற 

கோவில் வாசலும்,

அறிவைத் தேடி நாம் நின்ற 

டியூஷன் சென்டர் நிழலும்,

நம் நினைவுகளை 

இன்னும் பேசிக்கொண்டிருக்கின்றன.



​காலங்கள் மாறி நாம் பிரிந்தாலும்,

அன்று என்னை மிதித்துச் சென்ற 

உன் பாதங்களின் ஸ்பரிசமும்,

என் கைப் பிடியில் 

நீ காட்டிய அந்தப் பத்திரமான பாசமும்...

இன்றும் என் இரும்பு நெஞ்சில்

 துருப்பிடிக்காமல் வாழ்கிறது!


இப்படிக்கு 


மிதிவண்டி 


சிகரன்

16 05 26 




No comments:

Post a Comment